கொரோனா பாதித்த இளம் பெண் லிப்டில் சென்ற போது, மருத்துவமனை ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்து உள்ள உள்ளேரி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அந்த இளம் பெண்ணை அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த இளம் பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில், அந்த இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணை அதே மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த கொரோனா சிறப்பு வார்டுக்கு வருகை தந்தார். அப்போது, அந்த இளம் பெண்ணிடம் பரிசோதனை மீண்டும் செய்ய வேண்டும் என்று கூறி, அங்குள்ள 4 வது மாடிக்கு செல்ல வேண்டும் என்று, அந்த இளம் பெண்ணை அழைத்து உள்ளார். அதன் படி, அந்த பெண்ணும், அந்த ஊழியரும் அந்த மருத்துவமனை லிப்ட்டில் சென்று உள்ளனர். 

அவர்கள் இருவரும் லிப்ட்டில் சென்றுகொண்டு இருக்கும் பொழுது, அந்த மருத்துவமனை ஊழியர், இளம் பெண்ணை லிப்ட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 4 வது மாடிக்கு லிப்ட் வந்ததும், கதவு திறந்த மறு கனமே, அந்த இளம் பெண் அலறியடித்த படி லிப்ட்டை விட்டு வெளியே ஓடி வந்து உள்ளார். இதனால், பயந்துபோன அந்த ஊழியர், லிப்ட் மூலமாக, அந்த மருத்துவமனையின் தரைப் பகுதிக்குச் சென்று விட்டார்.

இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு ஓடி வந்த மற்ற ஊழியர்கள் “என்ன நடந்தது?” என்று கேட்டு உள்ளனர். அந்த பெண்ணும், தன்னை ஒரு மருத்துவமனை ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறி அழுதுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர் யார்? என்று தேடிப் பார்த்து விசாரித்தார்கள்.

இந்த சம்பவம், அந்த மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் பரவியது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டனர். “அந்த ஊழியர் பாதுகாப்பு உடை அணிந்து இருந்ததால், அவரது முகம் தெரியவில்லை” என்று, பாதிக்கப்பட்ட பெண் பதில் அளித்து உள்ளார்.

இதன் காரணமாக, அந்த மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும், இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அந்த மருத்துவமனையின் முன்பாக திரண்டு, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். 

இது தொடர்பாக அந்த பகுதி காவல் நிலையத்திற்கும் தகவல் சென்றது. இது குறித்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அதேப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான அஸ்வின் கிருஷ்ணா என்பதும், அவர் அந்த மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, அந்த நபரை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், இந்த சம்பவத்துக்குக் கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கேரளா மாநிலத்தில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதித்த இளம் இளம் பெண்ணை, ஆம்புலன்ஸ் ஒட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, அதன் தொடர்ச்சியாக, மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்க முயன்ற சம்பவம், கேரளா மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.