டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் இன்று 43 வது நாளாக நீடித்து வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கும் முக்கிய எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு என்று, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வரும் இந்த இன்றுடன் 43 வது நாளாக தொடர்ந்து வருகிறது. 

குறிப்பாக, இதுவரை இல்லாத அளவில் தலைநகர் டெல்லியில் மிக கடுமையான பனி பொழிந்து வருகிறது. இதனால், மிக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த கடும் பனி பொழிவு மற்றும் குளிரிலும் விவசாயிகள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது.

விவசாயிகள் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, மத்திய அரசு இதுவரை 7 சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி உள்ளது. இதில், கடைசியாகக் கடந்த மாதம் நடந்த 6 வது சுற்று பேச்சு வார்த்தையில், மின் கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

அப்போது, “வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்” ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாகவும் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்பட வில்லை. இது தொடர்பாக கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற 7 ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் வழக்கம் போல் தோல்வியிலேயே முடிந்து போனது. இதனால், இரு தரப்பினரும் மீண்டும் நாளை 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த 8 வது கட்ட பேச்சு வார்த்தையில், தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் அணி திரண்டு இன்று டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர். அதன் படி, டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உள்பட டெல்லியின் 4 எல்லைகளில் இருந்தும் இந்த பேரணி இன்று நடைபெற்றது. 

இதன் காரணமாக, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு 
போடப்பட்டு உள்ளது. அதே போன்று, முக்கிய பகுதியான சிங்கு எல்லையில் போலீசார் அதிக அளவிலான எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும், விவசாயிகளின் இந்த டிராக்டர் பேரணியை முன்னிட்டு, அரியானா மாநிலத்தில் உள்ள குண்ட்லி - மனேசர் - பல்வால் சுங்க சாவடி பகுதியிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

எனினும், விவசாயிகள் பல்வால் பகுதி வரை டிராக்டர் பேரணியாக செல்ல முடிவு செய்திருந்த நிலையில், அதில் அதிரடி மாற்றமாக நொய்டா வரை டிராக்டரில் விவசாயிகள் பிரமாண்ட பேரணியாக சென்றனர். அதன் படி, அரியானாவில் பல்வால் பகுதியில் இருந்தும் விவசாயிகள் பேரணியாக டிராக்டரில் புறப்பட்டுச் சென்றனர்.