கொரோனாவுக்கு மத்தியில் தான், இந்த 2021 ஆம் ஆண்டே பிறந்தது. அப்படி, இந்த 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

ஜனவரி 14, உகாண்டாவில் அதிபரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

ஜனவரி 20, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோற்று, ஜோ பைடன் 46 வது அதிபர் ஆனார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றார்.
 
பிப்ரவரி 1, மியான்மார் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை, ராணுவம் கலைத்தது. அத்துடன், அந்நாட்டின் முக்கிய தலைவராக இருந்த ஆங் சான் சூகியை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது. முக்கியமாக, அந்நாட்டின் அதிபர் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 21, அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மீது முழங்காலிட்டு அமுக்கி, அவர் உயிரிழக்க காரணமாக இருந்த காவல் துறை அதிகாரி 45 வயதான டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவி பிறப்பித்தது.

மே 31, சீனா நாட்டில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 18, கிட்டதட்ட 59 மில்லியன் வாக்காளர்களை கொண்ட ஈரான் நாட்டின், 13 வது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 28 மில்லியன் வாக்காளர்களே ஓட்டு பதிவு செய்த நிலையில், 2017 லில் நடைபெற்ற தேர்தலை காட்டிலும், 24.85 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. இதில், அதிபர் வேட்பாளராக களம் கண்ட 4 வேட்பாளர்களில், COMBATANT CLERGY ASSOCIATION-ஐ சேர்ந்த இப்ராஹிம் ரைசி என்பவர் பதிவான மொத்த வாக்குகளில் 18 மில்லியன் வாக்குகள் பெற்று அதிபரானார் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஜூலை 7, ஹைட்டி அதிபர் ஜோவனேல் மாயஸ், அவரது இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவரது மனைவி பலத்த காயம் அடைந்தார்.

ஜூலை 11, பிரிட்டன் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சன் உடன் விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தில், விண்வெளிக்குச் சென்று திரும்பினார். இவரை, உலகமே கொண்டாடியது.

ஜூலை 18, இந்தியா உட்பட 91 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அதிகாரிகளின் நிதி ரகசியங்களை பாண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தியது.

ஆகஸ்ட் 15, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் விலகிக்கொண்டதும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதையடுத்து, ஆப்கானியர்கள் பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆப்கனிலிருந்து தப்பியோட முயன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இன்றைய தினத்தில் தான், தாலிபான்கள் அந்நாட்டின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றினர். 

ஆகஸ்ட் 16, ஆப்கானியர்கள் பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆப்கனிலிருந்து தப்பியோட முயன்று அங்குள்ள காபூல் விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்ததால், பெரும் பீதி ஏற்பட்டது.

ஆகஸ்ட் 27, ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 182 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செப்டம்பர் 7, ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு முல்லா முகமது ஹஸன் அகுண்ட் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 4, ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடாவை, அந்நாட்டின் நாடாளுமன்றம் தேர்வு செய்தது.

அக்டோபர் 31, ஐநாவின் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

நவம்பர் 19, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல் பரிசோதனைக்காக வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்குச் சற்று முன்பாக, அதிபருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் ஜோ பைடன், துணை அதிபரான கமலா ஹாரிஸிடம் வழங்கியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

நவம்பர் 24, ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டின் நிதியமைச்சராக இருந்த மக்தலீனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்.

நவம்பர் 24, தென் ஆப்பிராக்காவில் முதன் முறையாக ஒமைக்கரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

டிசம்பர் 8, ஜெர்மனியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டு கால ஆட்சி, முடிவுக்கு வந்தது. இதனால், அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக ஏஞ்சலா மெர்கல் அறிவித்தார்.

டிசம்பர் 29, பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டிசம்பர் 30, அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் சுமார் 2,800 க்கும் மேற்பட்ட விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

டிசம்பர் 31, அமெரிக்காவில் விமானத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பெண் பயணி, அந்த விமானத்தில் உள்ள கழிவறையிலேயே தன்னை தனிமைபடுத்திக்கொண்டார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, “உலக ஜனநாயகத்துக்குப் பெரிதும் மோசமான ஆண்டாகவே இந்த 2021 ஆம் ஆண்டு இருந்தது என்றும், முக்கியமாக மியான்மர், சூடான், மாலி, கினியாவில் மற்றும் ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயக ரீதியிலான அரசுகள் யாவும் கவிழ்க்கப்பட்டன. 

குறிப்பா, இந்த 2021 ஆம் ஆண்டில் “இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, பெலாரஸ், கியூபா என்று வலது மற்றும் இடது வேறுபாடில்லாமல் இந்த ஆண்டில் கருத்துரிமைக்கு எதிரான போக்கு பெரிய அளவில் காணப்பட்டன” என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு உள்ளன.