ஒமிக்ரான், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பணிகளால் கடந்த சில மாதங்களாக உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் மீண்டுட் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.

ஒமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளிலும் தினசரி கொரோனா பாதிப்பு படுவேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மீண்டும் லட்சக்கணக்கில் வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. 

ஒமிக்ரான் பெரியளவில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் கூட அதிகப்படியான பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்டும்போது அது சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

omicron delta WHOஇந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் ஒமிக்ரான் வைரசும், டெல்டா வைரசும் சேர்ந்து சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளார். இதையொட்டி மேலும் அவர் கூறியதாவது:-

“தற்போது கொரோனா தொற்று பாதிப்பு சாதனை அளவாக அதிகரிக்கும் வகையில் டெல்டா வைரசும், ஒமிக்ரான் வைரசும் இரட்டை அச்சுறுத்தல்களாக உள்ளன. இதனால் மருத்துவமனை சேர்க்கைகளும், இறப்புகளும் அதிகரிக்கின்றன.

கடந்த வாரம் உலகளாவிய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் அதிகமாக பரவக்கூடியது. ஒமிக்ரான் வைரஸ் மிக அதிகமாக பரவுகிறது என்பது எனக்கு கவலை அளிக்கிறது. டெல்டாவும் அதே நேரத்தில் புழக்கத்தில் இருக்கிறது. இவ்விரண்டும் சுனாமி பேரலை போல கொரோனா மாறும் ஆபத்து உள்ளது.

இது மிக வேகமாக நகர்கிறது. தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதுடன், கூடுதலாக தொற்று அலைகளைத் தடுக்க பொது சுகாதார சமூக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. டெல்டாவும், ஒமிக்ரானும் ஒன்றாக பரவுவதால் உலக நாடுகளின் சுகாதார கட்டமைப்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்.

சுகாதாரப் பணியாளர்களும் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் ஒரு நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் தற்போது பரவும் நோய்த்தொற்றால் இறக்கும் அபாயம் ஏற்படும். 

WHO Delta, Omicronமருந்து உற்பத்தி நிறுவனங்களும், பணக்கார நாடுகளின் தலைவர்களும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, தற்போது ஒமிக்ரான் வைரஸ்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் பெரும் போராட்டம் நடத்தின. அடுத்த ஆண்டு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கும் என்றே நினைக்கிறேன். 

2022 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் தீவிரம் கட்டுப்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு நாட்டிலும் அதன் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும். அடுத்தாண்டின் நடுப்பகுதியில் 70 சதவீத மக்களை தடுப்பூசி சென்றடைவதற்கு இணைந்து பணியாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.