ஒமிக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு அசத்தி உள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், சுமார் ஒரு மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2 ஆம் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கால் பதித்து வருகிறது.

இந்த ஒமிக்ரான் வைரசில், கொரோனாவின் பிற எந்த உருமாறிய வைரசிலும் காணப்படாத அளவுக்கு அதன் ஸ்பைக் புரதத்தில் 37 பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) இருப்பதும், இந்த ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தித்தான் ஒமிக்ரான் மனித உடல் செல்களுக்குள் நுழைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Scientists identify antibodies that block Omicron Covid variantஒமிக்ரான் வைரஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். 

ஒமிக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு தகவல்கள் ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் இதுபற்றி கூறும்போது, “ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களை குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் (நோய் எதிர்ப்பு பொருள்) கவனம் செலுத்தி, வைரசின் தொடர்ச்சியான பரிணாமத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்பு சொல்கிறது” என குறிப்பிட்டார்.

ஒமிக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தக்கூடிய ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருப்பதால், இவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கவும், ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கவும் வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் கூறும்போது, “பல்வேறு வகையான வைரஸ்களில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிப்பதின் மூலம், அவற்றை ஆன்டிபாடிகள் வீழ்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு, இந்த பகுதிகளை குறிவைக்கிற தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடி சிகிச்சைகளை வடிவமைக்க உதவும். இது பரந்த அளவிலான மாறுபாடுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவித்தார்.

Scientists identify antibodies that block Omicron Covid variantஇதனிடையே அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. அமெரிக்காவில் நேற்று முன் தினம் 3.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் 2,017 பேர் உயிர் இழந்தனர்.  

நேற்று 4.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1,777 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54.65 கோடி பேர் பாதிக்கப்பட்டு 8.44 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 1.24 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர். அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமும் தீவிரமடைந்துள்ளது. 

ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் மற்றும் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஆண்டனி ஃபவுசி தெரிவித்துள்ளார்.