சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டின் நல்ல தொடக்கமாக பொங்கல் வெளியீடாக திரையரங்குகளை திருவிழாவாக மாற்ற வருகிறது அஜித்குமாரின் வலிமை திரைப்படம். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை திரைப்படத்தில் ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள வலிமை படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக வெளிவந்த வலிமை Glimpse, மேக்கிங் வீடியோ மற்றும் டிரைலர் அனைத்தும் எக்கசக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் முழு சென்சார் அறிக்கை தற்போது வெளியானது. 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட வலிமை படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.