தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படும் நடிகராகவும்  வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அரசியல் & சினிமா என இரண்டிலும் மிக நேர்த்தியாக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மகிழ் திருமணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்த கலகத் தலைவன் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பரியேறும் பெருமாள் கர்ணன் படங்களின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்துள்ளார் மாமன்னன் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக பதவி வகித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

தமிழக அமைச்சரவையின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகியவற்றின் அமைச்சராக, மாண்புமிகு முதல்வர் M.K.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் மதிப்பிற்குரிய ஆளுநர் RN.ரவி பதவி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க தமிழக அமைச்சரவையின் 35 வது அமைச்சராக தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றார்.

அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படம் நான் தனது கடைசி திரைப்படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் உருவாகும் படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறை தமிழக அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் கலாட்டா குழுமமும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..’

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்!@Udhaystalin #UdhayanithiStalin #MinisterUdhayanidhi #NewHigh4TNSports pic.twitter.com/inLmrtPumd

— Galatta Media (@galattadotcom) December 14, 2022