தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சைன்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமான அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இதனையடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அவர்களின் பயோபிக் திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. 

இந்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசும்போது, “என்னுடைய பயோபிக் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க போகிறார். இன்னும் முழுவதும் உறுதியாக சொல்லவில்லை. என்னுடைய கிரிக்கெட் கரியருக்கு பிறகு தான் அந்த படம் எடுக்கப் போகிறோம். அவர்தான் நடிக்கப் போகிறார் அவர்தான் இயக்கவும் போகிறார் என்று நினைக்கிறேன்..." என நடராஜன் தெரிவித்துள்ளார்.