தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து, தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

அத்துடன், இன்றைய தினம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். 

அதன்படி, இன்றைய தினம் இது வரையில் கிட்டதட்ட தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு,  நெல்லை, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ராமநாதபுரம், கடலூர், நாகை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், தொடர் கனமழை காரணமாக வட சென்னை பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து இன்றுடன் நான்காவது நாளாக விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையின் பல இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை தியாகராய நகரில் தேங்கியுள்ள மழைநீரை, ராட்சத மின்மோட்டார் கொண்டு அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தி.நகர் பாண்டி பஜார் மற்றும் வள்ளுவர் கோட்டம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான முக்கிய இணைப்பு சாலையான, கோபதி நாராயணா சாலையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், நேற்று இரவு முதல் ராட்சத மின்மோட்டாரை கொண்டு மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. 

அங்கு, வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு சாலைகளில் திருப்பி விடப்பட்டு உள்ளது. இதேபோன்று, மாநாகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும், தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

முக்கியமாக, “கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” என்று, சென்னை மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.