வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே  கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த 5 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் சென்னையை வரலாறு காணாத மழை புரட்டி போட்டு விட்டது.

சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் பெய்ய துவங்கிய கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. சென்னை நகர் பகுதிகள், புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பல இடங்களில் வீட்டின் மாடி வரை கூட தண்ணீர் தேங்கியது. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகத்தான் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன்பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

t1

மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று, காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு ஏற்கனவே கூறி இருந்தது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மீண்டும் மழை வெளுத்தெடுக்க தொடங்கியது.

இன்று மதியம் வரை பேய் மழை கொட்டிய நிலையில் தற்போது மழை அளவு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று மாலை, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

'வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

அடுத்து 2 மணி நேரத்திற்கும் அதே வேகத்தில் நகர்ந்து கரையைக் கடக்கும். இதனால் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும் கூட கனமழை பெய்யலாம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் தரைக் காற்று அதிகமாக வீசக்கூடும். 30 கி.மீ வேகத்திலிருந்து 40 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.

T2

மழையைப் பொறுத்தவரையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை முதல் மழை குறையும்' இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே, தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.