சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வங்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா வடதமிழகம் கடற்கரை பகுதியில் சென்னைக்கு அருகில் இன்று மாலை கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

q1

இடைவெளி விடாமல் பெய்து வரும் மழையால் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் 9 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் - ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை, செம்பியம் - ஜவஹர் நகர் சாலை, ஈவிஆர் சாலையில் காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வியாசர்பாடி - முல்லைநகர் பாலம், பெரவள்ளூர் - 70 அடி சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு, அம்பேத்கர் சாலையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை எந்த விமானங்களும் தரை இறங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

q2

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர்  1 முதல் இதுவரை  20 செ.மீ.க்கு பதில் 39 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 54 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது.  சென்னையில் கடந்த அக்டோபர்  1 முதல் இதுவரை 23 செ.மீ.க்கு பதில் 47 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 77சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்றார். கரையை கடக்கும்போது 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் தமிழக கடற்கரை கடலோரப் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.