ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து குறித்து மக்களவையில் ராஜ்நாத் சிங் முழுவதுவமாக எடுத்துரைத்து விளக்கம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ தளத்தில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 4 பைலட்கள் உள்பட மொத்தம் 13 பேரின் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இங்கு, சற்று முன்னதாக சென்ற
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

குறிப்பாக, துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்த படி, ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அஞ்சலி செலுத்தினார். 

அப்போது, பேசிய அவர் “ராணுவத்தில் பிபின் ராவத்தின் பங்களிப்பு சிறப்பானது; அவரின் வியூகத்தால் சீன ராணுவத்தை பின்வாங்க செய்தார், இந்தியா ஒரு மிகச்சிறந்த இராணுவ அதிகாரியை இழந்து விட்டது, உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதிபெற பிரார்த்திக்கிறேன்” என்று, குறிப்பிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, ராணுவ அதிகாரிகள் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக, ராணுவ அதிகாரிகள் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, “ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டுவரப்படும்” என்றும்,  மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார். தற்போது அது தொடர்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.