நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம், 57ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் நள்ளிரவு வங்க கடலில் ஏற்பட்ட கடும் புயலால் மரண ஓலத்தில் உருக்குலைந்து, தனது அடையாளங்களை தொலைத்து காணப்படும் தனுஷ்கோடி பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் காண இருக்கிறோம்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம், அதனருகே துறைமுகம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும், இதமான காற்றும், தேனீக்களைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள். இவையெல்லாம் தனுஷ்கோடியின் முந்தைய அடையாளங்கள்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது அதிகம் புழக்கத்தில் இருந்தது கடல் வழி பயணங்கள் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பயனாக இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட கீழ்திசை நாடுகளுக்கு எளிதாக  செல்ல ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட  நகரம் தான் தனுஷ்கோடி.

அந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்திற்காக மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24 ஆம் தேதி போர்ட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. தொடர்ந்து தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. 

dhanushkodi anniversary cyclone

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரே பயணசீட்டில் வியாபாரிகள் பல்வேறு வகையான பண்டங்களையும், சரக்குகளையும் தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்கு கொண்டுசென்று பிறகு அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று தலைமன்னாரில் இருந்து மீண்டும் ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்றனர்.

கொழும்பிலிருந்து எலட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தமிழகத்திற்கு வாங்கி வந்தனர். இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வியாபார வளர்ச்சி வளர்ந்தது.

இந்த ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964 டிசம்பர் 17-ல் காற்றழுத்தத் தாழ்வுநிலை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை  வழுவிழந்து இலங்கையை நோக்கி திரும்பியது. 

அப்போது கடும் மழைக்கு மத்தியில் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களும் மற்றவர்களும் தங்களை விழுங்க காத்திருக்கும் ஆழிப்பேரலை பற்றி அறிந்திருக்கவில்லை. 

dhanushkodi cyclone hit

இலங்கையை நோக்கி திரும்பிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்து டிசம்பர் 22-ல் தனுஷ்கோடிக்குள் புகுந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் வங்கக்கடலில் உருவான சூறாவளிப் புயல், ராட்சத அலைகள் தனுஷ்கோடியை புரட்டி போட்டது. 

புயல் அரக்கனின் கோர தாண்டவத்தில் சுற்றுலா வந்த கல்லுாரி மாணவர்கள், பக்தர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேலானோர் பலியாகினர். புயல் தாக்கத்தால் தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே நிலையம், கப்பல் துறைமுகம், கிறிஸ்துவ பேரலாயம், விநாயகர் கோயில், பள்ளிக்கூடம், தபால் நிலையம் உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்து சின்னபின்னமானது. 

பொழுது புலர்ந்த மறுநாள் டிசம்பர் 23 அம் தேதி போர் நடந்தது போல் தனுஷ்கோடியில் எங்கு பார்த்தாலும் மனித சடலங்கள் ஒதுங்கி கிடந்தது. ஆழிப்பேரலையில் சிக்கிய பாம்பன் - தனுஷ்கோடி பயணிகள் ரயிலில் பயணித்த 115 உயிர்களையும் புயல் உள்வாங்கி கொண்டது.

dhanushkodi cyclone

 7அடி உயரத்துக்கு எழும்பிய அலைகள் தனுஷ்கோடி ஊருக்குள் புகுந்து  ஆயிரக்கணக்கான உயிர்களை அள்ளிகொண்டு போனதை இன்று நினைத்தாலும் நடுங்க செய்கிறது. இத்துயர சம்பவத்தை தேசிய பேரிழப்பாகவும், இங்கு மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மத்திய அரசு அறிவித்தது. 

அன்று முதல் இன்று வரை தனுஷ்கோடியில் நிரந்தரமாக மனிதர்கள் தங்கிட தமிழக அரசும் அனுமதிப்பதில்லை. சுமார் 57 ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலையால் உருக்குலைந்த தனுஷ்கோடி நகரம் தற்போது வரை மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றியே இருந்து வருகிறது. 

இக்கோர புயலை நினைவு கூறும் விதமாக இன்றும் தனுஷ்கோடியில் இடியும் தருவாயில் கிறிஸ்துவ பேராலயம் (தற்போது ஒருபக்க சுவர் இடிந்துள்ளது), விநாயகர் கோயில், தபால் நிலைய கட்டடங்கள் வரலாறு அரிச்சுவடாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.