தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த் தொடர்ந்து தமிழ் திரையுலகில் சிறந்த மிக முக்கியமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, காவியத்தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, கேம் ஓவர், மண்டேலா என ரசிகர்களின் பல ஃபேவரட் திரைப்படங்கள் Y NOT ஸ்டூடியோஸ் படைப்புகள் தான்.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் Y Not ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் உலகெங்கும் 17 மொழிகளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக Y Not ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  உருவான கடைசீல பிரியாணி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இதனையடுத்து இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கும் தலைக்கூத்தல் திரைப்படத்தை Y NOT ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் நடிகர் கதிர் இணைந்து நடிக்கும் இப்படத்தில் நடிகை வசுந்தரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 22) தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. மேலும் இத்திரைப்படத்தின் மற்ற தொழிநுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.