“ 'கருணாநிதியை விட டேஞ்சரான ஆள்  இந்த ஸ்டாலின்' என வட இந்தியாவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்” என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை திமுகவின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் ஸ்டாலின் ஆற்றிய உரைகள் யாவையும் தொகுத்து, “தளபதி மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்” என்று, 3 பாகங்களாக நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்த 3 புத்தகங்களும் வெளியிட்டப் பிறகு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கடந்த 1989 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை வணங்கி ஆற்றிய எனது கன்னிப்பேச்சு தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றியது வரையிலான சட்டமன்ற உரைகள் அடங்கிய 3 பாகங்கள் கொண்ட நூல் தொகுப்பினை, கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன்  வெளியிட, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு  பெற்றுக்கொண்டது எனக்கு பெருமையே” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் எனது சட்டமன்றப் பணிகளை நான் அமைத்துக் கொண்டேன்” என்றும், நினைவு கூர்ந்தார்.

“மக்களின் குரலான சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுகள், தரம் குறையாத் தங்கம் நிகர் கருத்துகளுடன் அமைய வேண்டும் என்பதை என் விருப்பமாக இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “ஆட்சிக்கு நல்ல பெயர் இருக்கிறது மக்கள் நன்றாக பேசுகிறார்களே என்று நினைத்து நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்றும், தவறுகள் இருந்தால் குறைகள், குற்றங்கள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த கூட்டத்தில் பெருந்தன்மையுடன் கேட்டுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ஆ.ராசா, நூல் அறிமுக விளக்க உரை ஆற்றினார்.

 அப்போது பேசிய அவர், “ 'கருணாநிதியை விட டேஞ்சரான ஆள்  இந்த ஸ்டாலின்' என, வட இந்தியாவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்” என்று, தெரிவித்தார்.

“இதை விட ஒரு நல்ல பெயரை நீங்கள் வாங்கவே முடியாது” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து சிரித்துக்கொண்டே ஆ.ராசா பேசினார்.

அதன் தொடர்ச்சியாக திமுகவின் பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார். 

அப்போது, “நான் பல வருடங்களாக தளபதியின் பக்கத்தில் இருக்கிறேன், கடந்த 6 மாத காலமாக தான் முதல்வர் என்ற முறையில் அவர் அருகில் நான் அமைச்சராக இருந்து பார்த்து வருகிறேன். தமிழக மக்களை அப்படி பார்த்துக் கொள்கிறார். 

இந்த கூட்டத்தின் மூலம் கட்சியையும் அப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அவரது முனைப்பு தெரிகிறது” என்றும், அவர் புகழராம் சூட்டினார்.