தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரான் அறிகுறி இருக்கிறதா என்று சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து சற்று ஓய்ந்தநிலையில், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாம் அலையை உருவாக்கியது.

இந்த இரண்டாம் அலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என நினைத்தபோது கொரோனாவின் அடுத்த உருவமான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 

omicron nellai

கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளால் கண்காணிக்கப்படுகின்றனர்.

தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை திரும்பிய திருமால்நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞருக்கு ஒருவாரம் கழித்து திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. 

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சளி பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவர் வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில் கொரோனா உறுதியானதால் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது சளி மாதிரியில் ஒமிக்ரான் தொற்றுக்கான வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய சென்னைக்கு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என்பது பரிசோதனை முடிவில் தெரிய வரும். இதனிடையே இளைஞருடன் தொடர்பில் இருந்த 78 பேருக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் அனைவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர்களும் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  சிகிச்சை பெறும் இளைஞர் உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

எனினும் கொரோனா பாதித்த இளைஞர், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அந்த வார்டுக்கு செல்லும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவச உடை அணிந்து முழுபாதுகாப்புடன் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

omicron nellai

இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு தினசரி பயணிகள் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் அதிகம் என்பதால், வேலூர் மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்பு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்துக்கு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இதுவரை 149 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு வாரம் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் தொடர்ந்து ஒரு வாரம் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.