"9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில், மேல்நிலை வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. அந்த சமையத்தில், கொரோனோ தொற்றின் தாக்கம் அதிகரித்ததின் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.

இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியது. இதனால், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. இதனையடுத்து, கொரோனா
தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிஜலையில், பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியது.

இந்த சூழலில் தான், “ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்” என்று, கடந்த மாதம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

இவற்றுடன், தற்போது பொது முடக்கம் அமலில் இருந்து வந்தாலும், தமிழக அரசால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தற்போது, “தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக” தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுத் தேர்வை நடத்துவதை பொறுத்தவரை, இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளன என்றும், அதற்குள் தற்போதுள்ள முழுமையான பாடத்திட்டத்துக்கு மாணவர்கள் தயாராகி விடுவார்களா என்பதை பார்க்க வேண்டி உள்ளது” என்றும், குறிப்பிட்டார். 

“தற்போது உள்ள பாடத்திட்டத்தில் 60 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து பொதுத் தேர்வை நடத்தலாமா? என்று விவாதித்து வருகிறோம் என்றும், சி.எஸ்.ஆர். மூலம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார். 

அத்துடன், “எல்.கே.ஜி., யூ.கே.ஜி. படிக்காமல் குறிப்பிட்ட வயதை அடைந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகள் மறுக்கக்கூடாது என்றும், அப்படி மறுப்பதற்கு எந்த விதியும் இல்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“கல்வி மேலாண்மை தகவல் மையம் எனப்படும் சாப்ட்வேர் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் அரசு பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்ததுள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “கொரோனா காரணமாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும், தற்போது வரை 2 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளனர்” என்றும், அவர் கூறினார். 

“தனியார் பள்ளிகளில் இருந்து மட்டும் 75 ஆயிரத்து 725 பேர் இந்த ஆண்டு அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளனர் என்றும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான
அடிப்படை வசதிகளான செல்போன், இன்டர்நெட் வசதி போன்றவை குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறேன்” என்றும், தமிழக
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர முதல் நாளிலேயே 25000 பேர் விண்ணப்பித்து உள்ளது  குறிப்பிடத்தக்கது.