“வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் சுழற்சி முறை இன்றி, எப்போதும் போல் இயல்பாக செயல்படும்” என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடந்த 1 ஆம் தேதி முதல் நாளைய தினம் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்து, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அத்துடன், இந்தியாவின் பிற மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பாதிப்புகளை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழகத்தில் இன்னும் விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

மேலும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா பொது முடக்கம் காரணமாக, பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் சற்று குறைந்து உள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறை இன்றி முன் எப்போதும் போல் வழக்கம் போல் செயல்படலாம்” என்று, தெரிவித்து உள்ளது. 

அதே போல், “தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படவும்” தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளன.

குறிப்பாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் கை சுத்திகரிப்பான்கள் மற்றும் முககவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவிறுத்தி உள்ளது.

அதே போல், “கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்” என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.

“ கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” என்றும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.