சின்னத்திரை மெகா தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை  வாணிபோஜன் வெள்ளித்திரையில் தற்போது கதாநாயகியாக அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக அசோக்செல்வன் உடன் இணைந்து வாணிபோஜன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வாணி போஜன், இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனரான அருண் இயக்கத்தில் பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடிக்கும் ஊர்க்குருவி  படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து வெப் சீரீஸிலும் நடித்து வரும் வாணி போஜன், கடைசியாக  ஜெய்யுடன்  இணைந்து ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய வெப் சீரீஸிலும் நடிக்கவுள்ளார். இந்த வரிசையில் வாணி போஜன் நடிக்கும் புதிய வெப் சீரீஸின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது.

சுந்தரபாண்டியன் பட இயக்குனர் S.R.பிரபாகரன் இயக்கும் இந்த புதிய வெப் சீரீஸில் நடிகர் கலையரசன் மற்றும் வாணிபோஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை விஜய் சந்திரசேகர் நடிகர் அர்ஜுன் மற்றும் லகுபரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அபி & அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிக்கும் இந்த புதிய வெப்செரீஸ் நேரடியாக 5 OTT தளத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த வெப்சீரிஸ் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.