தமிழகத்தில் முதல் முறையாக முழுக் கரும்பு, நெய் மற்றும் 20 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக உணத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 2022 ஆம் ஜனவரி மாதம் 14-ம் தேதி வர உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கென 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.

அந்தப் பரிசு தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

p1

ரூ.1,088 கோடி செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தில் கரும்பு விடுபட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கடலூர் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 20 பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பும்  இடம்பெற முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளதாக  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி  20 பொருட்களுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும்.

p2

முதல் முறையாக பொங்கல் பரிசு தொகுப்புடன் நெய்யும் சேர்த்து வழங்கப்பட இருக்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப டோக்கன் முறைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே நடவடிக்கை மேற்கொள்வர். பரிசு தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மண்டல வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்படும். 

கடந்த 15 நாட்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 7,50,000 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு பொருட்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொருத்தவரை டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்.

p7

கடந்த அ.தி.மு.க. ஆட்சியை விட தி.மு.க .ஆட்சியில் கூடுதலாக 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த ஆட்சியை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 95% நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டு விட்டன. மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வது தொடர்பாக அவற்றின் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி உள்ளோம். அது குறித்து மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்த பின்னர் ஈரப்பதம் குறைந்த அளவு உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி 97% மக்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். அதேபோன்று இந்த பரிசு தொகுப்புகளையும் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.