நடிகரும் இயக்குனரும் கதாசிரியருமான RNR மனோகர் இன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில்  காலமானார். 

rnrநடிகர் RNR மனோகர் முதலில் 1993ம் ஆண்டு வெளியான 'பேண்டு மாஸ்டர்' படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பின்பு 1994-ல் 'மைந்தன்'  என்ற படம் மூலம்  கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் அறிமுகமானார். 1995- ம் வருடம் ' கோலங்கள்' படத்தில் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் பணியற்றியதோடு அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். ஹென்றி தயாரித்த 'கோலங்கள்' படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  மேலும் புதுமை பித்தன், தென்னவன், புன்னகை பூவே, வந்தே மாதரம், ஆகிய பாடங்களிலும் கதாசிரியராக பணியாற்றிய இவர்  மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய படங்கள் கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

மேலும் படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.  அதனை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த 'தென்னவன்' படத்துக்கு வசனம் எழுதினார்.  அந்தப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2009ம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த 'மாசிலாமணி' படத்தை இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான 'வேலூர் மாவட்டம்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது தவிர 'சலீம்', 'என்னை அறிந்தால்', 'நானும் ரவுடிதான்', 'வேதாளம்', 'மிருதன்', 'கைதி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோலங்கள் முதல் டெடி வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த இருபது நாட்களாக தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும்  திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் RNR மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது.