மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் காளைகள் வெற்றி பெற்றது முதல், போட்டிக்கு காளையை அழைத்து வந்த தில்லானா சிறுமி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு சுவாரஸ்யங்களை தற்போது பார்க்கலாம்.

பொங்கலை பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தற்போது காளைகள் ஒவ்வொன்றும் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன. 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 430 வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

இதில், முதல் காளையாகக் கோயிலுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அது சீரி பாய்ந்து பறந்தது. இதனையடுத்து, மற்ற மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் நிறைய சுவாரஸ்யங்களும் அரங்கேறி இருக்கின்றன.

அதன் படி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் காளையானது, யாருடைய கையிலும் பிடிபடாமல் புயல் வேகத்தில் சென்றது. அந்த மாட்டை அடக்க முடியாமல் மாடி பிடிவீரர்கள் திணறினார்கள்.

அதே போல், முன்னதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்ப்பதற்காக வருகை தந்திருந்தார். அவர் வருகை தந்த அடுத்த சற்று நேரத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில், அந்த மாட்டை யாராலும் அடக்க முடியவில்லை இதனால், உதயநிதி ஸ்டாலின் காளை வெற்றி பெற்றது.

முக்கியமாக, இந்த போட்டி தொடங்குவதற்குச் சற்று முன்பாக காளை உரிமையாளர்கள், தங்களது காளைகளை ஒவ்வொன்றாக அழைத்து வந்தனர். அப்போது, தில்லானா சிறுமி ஒருவர், தனக்குச் சொந்தமான காளையை, போட்டி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அந்த சிறுமியும், அந்த சிறுமி பிடித்த வந்த காளையம் தற்போது வைரலாகி வருகின்றனர்.

அத்துடன், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிக சிறந்த பண்டிகை. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வை பெருக்கவும் நம்மை தூண்டட்டும். தைத்திருநாளில் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைப் பெறுவோம்” என்றும், பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளையின் உரிமையாளர்கள் என இது வரை 17 பேரை காளைகள் முட்டியதில் அவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதே போல், “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழில் டிவிட் செய்து, “மதுரை ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வருகிறேன்” என்றும், குறிபிபட்டு இருந்தார். 

அதன்படியே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக தற்போது மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து, பலத்த பாதுகாப்புடன் அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்று, ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து ரசித்து வருகிறார். 
 
அத்துடன், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் காந்தி - உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த வருகின்றனர்.  

முக்கியமாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், “வணக்கம்” என்று தொடங்கும் வீடியோ ஒன்றையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியொவில் “இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துகள்” என்று, அவர் கூறியுள்ளார். 

“இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த திருவிழாவை, அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதே போல், கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியையும் அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும், “தமிழ் மருத்துவர்கள் பலர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாகப் பாராட்டு தெரிவித்த அவர், இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழர்கள் அதிக பங்காற்றியுள்ளதாக” புகழாரம் சூட்டினார். 

அதே போல், சென்னை காவல் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை முதலமைச்சர் பழனிசாமி, தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் துறையினருடன் முதல்வர் பழனிசாமி பொங்கல் விழா கொண்டாடினார். 

குறிப்பாக, பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய அளவில் #பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.