தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர துணை நடிகர்களில் ஒருவரான நடிகர் RNR.மனோகர் இன்று (நவம்பர் 17.) மாரடைப்பால் காலமானார். பேண்டு மாஸ்டர் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக RNR.மனோகர் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாகவும் எழுத்தாளராகவும் கோலங்கள், தென்னவன் உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றிய RNR.மனோகர்,  தல அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்திற்கும் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனராக நடிகர் நகுல் நடித்த மாசிலாமணி மற்றும் நடிகர் நந்தா நடித்த வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள RNR.மனோகர் தல அஜீத்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம், ஜெயம் ரவியுடன் மிருதன், பூமி, சூர்யாவுடன் காப்பான், கார்த்தியின் கைதி, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஆர்யா நடித்து வெளிவந்த டெடி திரைப்படத்திலும் நடித்திருந்தார் RNR.மனோகர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் RNR.மனோகர் இன்று (நவம்பர் 17.) மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 61. எழுத்தாளர் இயக்குனர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் RNR.மனோகர்-ன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.