கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

CURFEW

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் இன்னும் விலகவில்லை. இந்தநிலையில் வருகிற 15-ம்  தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது.

இந்நிலையில்  தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று  உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்  இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? அல்லது தற்போதுள்ள நிலை தொடரலாமா? என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்வார்.

அதனைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.