காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண்ணின் தாலியை அறுத்து, அவருக்கு மொட்டை அடித்து பெண்ணின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூக்கடையில் வேலை பார்த்துவந்த யுவராஜ் என்ற இளைஞர், தனது வீடு அமைந்துள்ள அதே பகுதியைச் சேர்ந்த பானுமதி என்ற இளம் பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.

இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்குத் தெரிய வந்திருக்கிறது.

காதலர்கள் இருவரும் ஒரே சமுகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், “ஏழை - பணக்காரன்” என்கிற சமூக அந்தஸ்து, இவர்களின் காதலுக்கு எதிராக வந்து நின்று தடை போட்டிருக்கிறது. இதனால், மகளின் காதலை அவரது பெற்றோர் மிக கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

இதனால், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலர்கள் யுவராஜ் - பானுமதி இருவரும், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த விசயம், அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்த நிலையில், உடனடியாக ஆட்களைத் திரட்டிக்கொண்டு அங்கு சென்ற அவர்கள், தங்களது மகள் பானுமதியை மிரட்டி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இதனையடுத்து, “காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி” அந்த இளைஞர், செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், “புதிதாகத் திருமணம் ஆன இளம் பெண் பானுமதி எங்கே?” என்று, விசாரணை நடத்தினார்கள். 

அப்போது, அந்த இளம் பெண் புதுச்சேரியில் உள்ள காலாகப்பட்டு என்னும் பகுதியில் தாய்மாமா வீடான அண்ணாமலை வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற செஞ்சி போலீசார், இளம் பானுமதியின் தாய்மாமனிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, பானுமதியின் தந்தை சாமிநாதனும், தாய்மாமன் அண்ணாமலை மற்றும் உறவினர்களும் சேர்ந்து, “காதல் திருமணம் செய்துகொண்ட பானுமதியை, கணவன் யுவராஜிடம் இருந்து பிரித்து வந்து அங்குள்ள முனீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கழுத்தில் இருந்த தாலியைக் கழட்டிப் போட்டு விட்டு, அவருக்கு அங்கேயே மொட்டை அடித்து வீட்டிற்கு அழைத்து வந்ததும்” தெரிய வந்திருக்கிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், பானுமதியின் தந்தை சாமிநாதனும், தாய்மாமன் அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். 

முக்கியமாக, பாதிக்கப்பட்ட இளம் பெண் பானுமதியை யாருடன் அனுப்பி வைப்பது என்று போலீசார் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.