சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குயிருப்புகளைச் சேர்ந்த 4 வீடுகள் தரைமட்டமான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மூதாட்டி ஒருவர் சமையல் எரிவாயு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாநகரம் 57-வது கோட்டத்திற்குட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வருபவர் பத்மநாபன். இவர் தீயணைப்புத்துறை சிறப்பு நிலை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில், பத்மநாபன் வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது, திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்டது. 

இதில் பத்மநாபன் வீடு உள்பட அருகே இருந்த 4 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. வீடு இடிந்ததில் வீட்டுக்குள் இருந்த நபர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்தவுடன் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

s1

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்த விபத்தில் ராஜலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் சேலம் மோகன் குமாரமங்கல்ம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் 10 வயது சிறுமி உள்பட மேலும் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது..

இதனால் பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் சுவரை துளையிட்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது 10 வயது சிறுமி பூஜாஸ்ரீயை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக உயிருடன் மீட்டனர்

சமையல் எரிவாயு சிலிண்டர் விபத்து சம்பவம் குறித்து, அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஆணையர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி காவல் ஆணையர், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நேரில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட வீடு அடுக்குமாடி குடியிருப்பு என்பதால், ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் வரிசையாக அடுத்தடுத்து இருந்த மற்ற வீடுகளில் தூண்கள், சுவர்கள் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

s2

வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், அதனை அகற்றும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இரு மாடி வீடுகள் இடிந்து விழுந்ததால், அருகில் இருந்த சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், காலையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

இடிபாட்டில் சிக்கி, காயமடைந்த வெங்கட்ராஜன், இந்திராணி, மோகன்ராஜ், நாகசுதா, கோபால், தனலட்சுமி, சுதர்சன், கணேசன், உஷாராணி, லோகேஷ், முருகன், கோபி ஆகியோர் என தெரியவந்துள்ளது. இதில் தீக்காயமடைந்த கோபி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விபத்து குறித்து மாகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.