சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூலம் தமிழக மக்களிடையே புகழ் பெற்றுத் திகழ்ந்துகொண்டிருந்தார். நல்ல பெயர், நல்ல புகழ் என்று சின்னத்திரையில் உச்சம் தொடும் நடிகையாக அவர் வலம் வந்துகொண்டிருந்தார்.

28 வயதாகும் சித்ரா பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற தொடரில் 'முல்லை' என்ற, கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

அதாவது, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, நேற்று அதிகாலை நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த அவரது கணவன் ஹேமந்த் ரவியிடம் போலீசார் விசாரித்து வந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்திராவின் உறவினர்கள் பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகை சித்ரா, பதிவு திருமணம் செய்து 2 மாதங்களே ஆவதால், அவரது மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போது, ஹேம்நாத் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது படப்பிடிப்பு தளத்தில் தகராறு ஏதேனும் நடந்ததா? என்று, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். 

அத்துடன், ஓட்டல் அறையின் வெளியே இருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை வைத்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை பொறுத்தவரையில், நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? கொல்லப்பட்டரா? என்பது பெரிய சந்தேகத்தை கிளப்பிய நிலையில், நடிகை
சித்ராவினுடைய நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என்றும் கூறப்பட்டது. 

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. இதனையடுத்து, சித்ராவின் உடலுக்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக, நடிகை சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா என்று விவாதிக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையின் முதல் கட்ட தகவலின் படி, சித்ரா தற்கொலை தான் செய்துகொண்டு உள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல்கள் அவருடைய சொந்த நகத்தில் இருந்து வந்தது என்றும், தெரிய வந்துள்ளது. இதனால், இந்த வழக்கின் பரபரப்பு தற்போது அடங்கத் தொடங்கி உள்ளது.