விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இராவண கோட்டம். ஷாந்தனு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

கொரோனா அச்சுறுத்தல் குறைந்த இந்நேரத்தில், முறையான பாதுகாப்புடன் படத்தின் ஷூட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நாயகி கயல் ஆனந்தியுடன் பைக்கில் சென்ற புகைப்படம் ஒன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர், நீங்க தான இது..என்று ஷாந்தனுவை டேக் செய்திருந்தார். இதை பார்த்த ஷாந்தனு, ஏன் யா...இப்படி பப்ளிக்கா மாட்டி விடுவியா என்று நகைச்சுவையாக கேட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இராவண கோட்டம் படப்பிடிப்பு பற்றிய புதிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. ரிஸ்க் நிறைந்த ஸ்டண்ட் காட்சிகளை படம்பிடித்து வருகின்றனர் படக்குழுவினர். இதுகுறித்து பதிவு செய்த ஷாந்தனு, ராஜு என்ற ஸ்டண்ட் கலைஞர் தனது உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். கடினமான ஸ்டண்ட்டை செய்து தற்போது ராஜு நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரைக்கு பின்னால் போற்றப்படாமல் இருக்கும் ஹீரோக்களே ஸ்டண்ட் கலைஞர்கள். அவர்களின் பணி ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. அதனால் தான் இந்த பதிவை பகிர்கிறேன் என்று அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷாந்தனு. 

சினிமாவிற்காக ஸ்டண்ட் கலைஞர்கள் பல தியாகங்களை செய்து வருகின்றனர். பல வலிகளையும், ரணங்களையும் கடந்து தங்கள் பணியில் ஆர்வம் காட்டும் ஸ்டண்ட் கலைஞர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. அவர்களது செயலை இணையவாசிகளுக்கு சுட்டி காட்டிய நடிகர் ஷாந்தனுவுக்கு சல்யூட். கடந்த ஆகஸ்ட் மாதம் இராவண கோட்டம் படத்தின் டைட்டில் லுக் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

பட பணிகள் ஒரு புறமிருக்க, Dadson பிக்சர்ஸ் தயாரிப்பில் எங்க போற டி எனும் பாடல் ஆல்பத்தை வெளியிட்டு அசத்தினார் ஷாந்தனு. இதில் ஷாந்தனுவின் மனைவி கிகி விஜய் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிருந்தா மாஸ்டர் இயக்கம் மற்றும் நடன கோரியோகிராஃபி செய்திருந்தார். இசையமைப்பாளர் தரன் இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார். க்யூட்டான இப்பாடல் ஆல்பம் இளைஞர்கள் விரும்பும் வகையில் அமைந்திருந்தது. 

மாஸ்டர் திரைப்படம் எப்போது வரும் ? அதில் ஷாந்தனுவின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் திரை தளபதி ரசிகர்கள். ஷாந்தனு கைவசம் முருங்கைகாய் சிப்ஸ் படம் உள்ளது. ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.