“தமிழ்நாட்டு மக்கள் மீது கலாச்சார தாக்குதலை மத்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது” என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேலம் சீலநாய்க்கன்பட்டி பகுதியில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிராச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன், கீ.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு, ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். 

அப்போது, மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், “சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டும் ஓட்டு கேட்க இங்கு வரவில்லை. எனக்கும் ஓட்டு கேட்டு வந்துள்ளேன்” என்று, குறிப்பிட்டார். 

“அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு 10 ஆண்டுகள் பின்னோக்கி பாதாளத்திற்குச் சென்று விட்டது” என்று வேதனை தெரிவித்த ஸ்டாலின், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவுக்கு அடி பணிந்து கிடக்கிற ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியைக் கொண்டு சென்று விட்டார்” என்றும், குற்றம்சாட்டினார்.

“தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல; சுயமரியாதை, உரிமையை மீட்பதற்கான தேர்தல் என்றும், தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க வேண்டிய தேர்தல் இது” என்றும், மு.க.ஸ்டாலின் கூறினார்.

அத்துடன், பழனிசாமிக்கும்  - பன்னீர்செல்வத்திற்கும் மக்களைப் பற்றி கவலை இல்லை என்றும், கமிஷன் ஒன்றே அவர்களின் நோக்கம்” என்றும், ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

“தமிழ்நாட்டிற்கான உரிமையை மத்திய அரசு மறுக்கிறது என்றும், கேட்கப்பட்ட நிதியே கிடைக்காத போது கூட்டணி எதற்கு?” என்றும்,  மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

“மத்திய அரசுடன் இணக்கமான உறவு என வடி கட்டிய பொய்யை பழனிசாமி சொல்லி வருகிறார்” என்று, தெரிவித்த மு.க. ஸ்டாலின், “கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகம் பாதாளத்திற்குச் சென்றுள்ளதாகவும்” கவலைத் தெரிவித்தார்.

குறிப்பாக, “தமிழ்நாட்டு மக்கள் மீது ரசாயன தாக்குதலையும் கலாச்சார தாக்குதலையும் மத்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது” என்று பகிரங்கமாகவே மு.க. ஸ்டாலின், குற்றம்சாட்டினார். 

“ஆனால், இந்த தாக்குதல்களைத் தடுக்க அதிமுகவால் முடியாது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் பாஜக கூறியபடியே நடக்கிறது” என்றும், மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுக்களை மு.க. ஸ்டாலின், முன் வைத்தார். 

“கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய ஆறு அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? என்றும், ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

முக்கியமாக, “தமிழகத்தில் பாஜக வால் வேறூன்ற முடியவில்லை என்றும், இதன் காரணமாகவே அதிமுகவை மிரட்டி அவர்கள் மீது சவாரி செய்கின்றனர்” என்றும், ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசினார்.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் பெற்ற வாக்குகள் 37 சதவீதம் தான் என்றும், ஆனால் 63 சதவீதம் பேர் பாஜக வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர் என்றும், அவர்கள் மற்ற கட்சிகளுக்குப் பிரித்து தங்களது வாக்குகளை அளித்துள்ளனர் என்றும், அதனால், ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பேற்று கூட்டணியை வலுவாக அமைக்க வேண்டும்” என்றும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.