ஆர்யா நடிப்பில் டெடி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆர்யா கைவசம் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3  படம் உள்ளது. தற்போது விஷால் நடிக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். துபாயில் நடக்கும் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார் ஆர்யா. 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதற்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி நடித்துள்ளார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

பொங்கல் விருந்தாக சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. அந்த போஸ்டரில் சார்பட்டா பரம்பரையை சார்ந்த ரேவ் கண்டெடுத்த வைரமாக கபிலன் (ஆர்யா) அவரை எதிர்த்து இடியாப்ப பரம்பரையை சார்ந்த பாயும் புலி வேம்புலி (ஜான் கொக்கேன்) மோதுவது போல் போஸ்டர் அமைந்தது. 

இந்நிலையில் படத்தின் பாத்திரங்கள் கொண்ட சார்பட்டா பரம்பரையின் உலகை காண்பித்துள்ளனர் படக்குழுவினர். இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. 

படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா, காளி வெங்கட், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.