கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை வழியே பயணமாகும் ரயில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. 

வடகிழக்கு பருமழையால், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 9-ம் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில், மூன்று நாட்களாக அங்கு கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

k1

இந்நிலையில், வங்கக் கடலில் தெற்கு அந்தமான அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 

இதனால் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையின்படி பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதோடு அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் 2-ம் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வரும் பேயங்குழி இரட்டை கரை சானலில் உடைப்பு ஏற்பட்டது. சானலில் சுமார் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்ட நிலையில், வெள்ள நீர் அருகே உள்ள ரயில் பாதையில் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதோடு ரயில் தண்டவாளங்களில் மண் குவிந்துள்ளது. இதனால் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி மார்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

k2

அதன்படி, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி மார்கத்தில் வரும் ரயில்களான குருவாயூர் எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் (மங்களூர் - நாகர்கோவில்), சாலிமர் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - நாகர்கோவில்) உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 10-ம் தேதி ஷாலிமரில் இருந்து நாகர்கோவில் புறப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் பாறசாலையுடன் நிறுத்தப்படும். இந்த ரயில் பாறசாலை - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மங்களூரில் இருந்து புறப்பட்ட மங்களூர் - நாகர்கோவில் ரயில் இரணியலில் நிறுத்தப்படும்.

இந்த ரயில் இரணியல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மங்களூர் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், இன்று திருச்சி -திருநெல்வேலி இடையே மட்டும் இயக்கப்படுகிறது. தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் நெல்லை-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் மண் அகற்றும் பணி விரைவாக நடந்து வருகிறது. மண் அகற்றியபின் சோதனைகளுக்குப் பின் ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.