சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய இடங்களை கண்காணித்து அத்தியாவசிய பொருட்களை அனுப்பும் வகையில் தண்ணீரில் மிதக்கும் அதி நவீன ட்ரோன்களை போலீசார் பயன்படுத்தி வரும் சம்பவம் மிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9-ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறி, சென்னை அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், கடைகள் என சென்னை நகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 

மழை வெள்ளத்தால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 

d1

இந்த நிலையில் மழை நீர் தேங்கியுள்ள வீடுகளை கண்காணித்து அங்கு தேவையான உணவு, அரிசி, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக வழங்குவதற்காக, தண்ணீரில் மிதந்து செல்லும் அதி நவீன ட்ரோன்களை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, ஆர்.கே, நகர், கே.கே. நகர்,  உட்பட பல இடங்களில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. 10 தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு 5 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த ட்ரோன் கேமராக்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கேமரா, இந்த முறை மீட்புப் பணிக்கும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மழைநீரில் வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உணவுப் பெருள்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இந்தவகை மிதக்கும் ட்ரோன்கள் மூலம் வழங்கப்படுவது புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

மேலும் நீர்நிலைகள், மேம்பாலங்கள் அருகே நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுக்க வேண்டாம் எனவும், குழந்தைகளை மின்சாதனங்கள், மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் ட்ரோனில் உள்ள ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். 

d3

சென்னை காவல்துறையின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களிடம் வெகுவான வரவேற்பு கிடைத்துள்ளது. மழைநீரில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் இருக்கும் ஆயிரம் வீரர்கள் முதல் கட்டமாக ஈடுபடுத்தப்பட்டனர். 

பின்னர் மீட்புப் பணியை விரைவுபடுத்துவதற்காக மேலும் ஐந்து கமாண்டோ படைகள் உள்பட 500 வீரர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சென்னையில் 1500 தீயணைப்பு படை வீரர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களில் தீயணைப்பு படையினர் 182 குடியிருப்புகளில் சூழ்ந்திருந்த மழைத் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். மழைநீரினால் சிக்கியிருந்த 1211 பேரை பாதுகாப்பு மீட்டுள்ளனர். 97 இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி உள்ளனர்.

மழையினால் பாதுகாப்பற்ற இடங்களில் சிக்கித் தவித்த 96 கால்நடைகளை மீட்டுள்ளனர். 68 இடங்களில் ஏற்பட்ட சிறு தீ விபத்துகள் அணைக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளம் சூழ்ந்தப் பகுதிகள் ட்ரோன் மற்றும் தண்ணீரில் மிதந்து செல்லும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.