சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் கடந்த சனிகிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. புதன் கிழமை இரவு முதல் பெய்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை கடற்கரையை நேற்றிரவு கரையை கடந்தது.

s1

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்களில் பல பகுதிகளிலும், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

இதற்கிடையில்,  புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, ஆந்திரப் பகுதியிலிருந்து குமரிக்கடல் பகுதி வரையிலும், உள் தமிழகம் வரையிலும் நிலவுவதாக சென்னை வானிலை மைம் தெரிவித்தது.  இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

s2

கனமழை மற்றும் வெள்ளம் வடியாததால் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர். 

மேலும் ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி (1.5 கிலோ மீட்டர் உயரம் ) வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை அதிகளவில் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.