தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அதர்வா முரளி கடைசியாக, தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளிவந்த கட்டலகொண்டா கணேஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா மற்றும் ப்ரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த குருதி ஆட்டம் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள தள்ளிப்போகாதே திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியானது.

மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள தள்ளிப்போகாதே திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் நரேன் காளி வெங்கட் ஜெகன் அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நின்னுக்கோரி படத்தின் ரீமேக்கான தள்ளிப்போகாதே படத்திற்காக N.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தள்ளிப்போகாதே திரைப்படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.