கனமழை காரணமாக சென்னையில் இன்று ரெயில் சேவைகளில்  மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

railwayதமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக  கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்கப்பாதை மற்றும் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் சாலை மற்றும் ரெயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை பாதிப்பு கருத்தில் கொண்டு  ரெயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் :

சென்னை கோட்டத்தின் தடா - சூலூர்பேட்டையில் உள்ள பாலம் எண்.167-ல் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் உயர்ந்துள்ளதால் , மக்களின்  பாதுகாப்பு கருதி தடா - சூலூர்பேட்டை பிரிவில் உள்ள மேல் மற்றும் கீழ் பாதைகள் 11.11.2021 இரவு 10 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது .

இதனால் ரெயில் எண். 07238 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா சிறப்பு ரெயில் சேவை 12 நவம்பர், 2021 இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வண்டி எண். 07237 பித்ரகுண்டா - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் சேவையும் நவம்பர் 12, 2021 இன்று ரத்து செய்யப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நேற்று புறப்பட்ட பெங்களூர் கண்டோன்மென்ட் - கவுகாத்தி சிறப்பு ரெயில், திருவனந்தபுரம் சென்ட்ரல்- ஷாலிமார் சிறப்பு ரெயில், பெரம்பூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - ரேணிகுண்டா - கூடூர் வழியாகத் திருப்பி விடப்பட்டது .

இந்நிலையில் இன்று 02433-02269 வண்டி எண் கொண்ட டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரெயில்கள் அரக்கோணம் - ரேணிகுண்டா - கூடூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது .  மேலும், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - ஹவுரா சிறப்பு ரெயில் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா சிறப்பு ரயில் ஆகிய ரயில்களும் அரக்கோணம் - ரேணிகுண்டா - கூடூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.