தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸ் பிரமாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1 & 2  படங்களுக்கு பின்னர் இந்திய அளவில் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அடுத்ததாக கேஜிஎஃப் படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் மற்றும் பாலிவுட்டில் ராமாயண இதிகாச கதையை தழுவி இயக்குனர் ஓம் ரௌட் இயக்கத்தில் தயாராகியுள்ள ஆடிபுருஷ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த 2 திரைப்படங்களின் இறுதிகட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக UV கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ரொமான்டிக் ஆக்ஷ்ன் திரைப்படமான ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு 2022 ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வருகிற நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு,தமிழ்,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்பாடல் வெளியாகிறது. தமிழில் கார்க்கியின் வரிகளில் வெளியாகும் ஆகூழிலே பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.