சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை நின்ற போதிலும், இதுவரை வெள்ளம் வடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் கடந்த சனிகிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. புதன் கிழமை இரவு முதல் பெய்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை கடற்கரையை நேற்று மாலை நெருங்கியது. இதனால் சென்னையில் 30 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை பெய்தது. புதன்கிழமை காலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை சென்னையில் 169 மி.மீட்டர் மழை பெய்து இருந்தது.

சென்னை தெருக்களை வெள்ளக்காடாக மாற்றிய அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையை கடந்து சென்றது. அந்த சமயத்தில் தரைகாற்று மிக பலமாக வீசியது. காற்றழுத்த மண்டலம் சென்னை அருகே கரையை நெருங்கியபோது சற்று வலுகுறைந்தது. 

t1

என்றாலும் நேற்று பெய்த தொடர் மழையில், 513 தெருக்கள் வெள்ளக்காடாக மாறின. அந்த தெருக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்க நேரிட்டது. மழைவெள்ளம் மிக அதிகமாக கரைபுரண்டு ஓடிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அதிக அளவில் தவிப்புக்கு உள்ளானார்கள். 

காற்றழுத்த மண்டலம் கரையை கடந்த பிறகு மழைப்பொழிவு கணிசமாக குறைந்தது. இந்த நிலையில் மழை சேத பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஒருங்கிணைந்து தெருக்கள், முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியை தீவிரப்படுத்தினார்கள்.

நேற்று இரவு முக்கிய சாலைகளில் தேங்கி நின்ற மழைவெள்ளம் ராட்சத பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றப்பட்டன. இதனால் பெரும்பாலான முக்கிய சாலைகளில் இயல்பு நிலை நேற்று இரவே திரும்பியது. இன்று காலை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. எனினும் தொடர்ந்து மழை நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தண்ணீர் தேங்கிய 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 125 இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு இருந்தது. மீதமுள்ள சுமார் 300 இடங்களில் மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.  சென்னையில் அடையாறு, இந்திரா நகர், தி.நகர், தரமணி, நங்கநல்லூர், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, மாம்பலம், கோடம்பாக்கம், சாலிகிராமம், சூளைமேடு, சூளை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர், கொளத்தூர், மயிலாப்பூர், எழும்பூர், ஆர்.கே.நகர். கே.கே.நகர் பகுதிகளில் அதிக பாதிப்பு காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

t2

சென்னையில் பலத்த மழை பெய்யத்தொடங்கியதில் இருந்து 253 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அவை அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டன. சென்னையில் மொத்தம் 16 சுரங்கப்பாதைகளில், 13 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் சுரங்கப் பாதைகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் 7 சுரங்கப்பாதைகளில் இன்று மதியத்திற்குள் தண்ணீர் அகற்றப்பட்டது. மற்ற சுரங்கப்பாதைகளிலும் தண்ணீரை முழுமையாக அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. எனவே இந்த சுரங்கப்பாதைகள் வழியாக விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பு காணப்பட்ட பகுதிகளில் 48 படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடத்தப்பட்டன. இந்த பகுதிகளிலும் தெருக்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.