வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்க கடல் பகுதியில் கடந்த 9-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து நாளை மறுதினம் திங்கட்கிழமை அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

r1

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுச்சேரி, கடலூர் மற்றும் ஏனைய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை அன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

r2

16-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மீனவர்களுக்கான விரிவான எச்சரிக்கை விரைவில் வழங்கப்பட இருப்பதாக வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.