“தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணையமைச்சருமான எல்.முருகனின் ஓட்டை வேறு யாரோ ஒருவர் செலுத்திவிட்டதாக” பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குான வாக்குப் பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், வழக்கத்தை விட சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வாக்குபதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி, இன்று காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் பிற ஊர்களை ஒப்பிடும் போது சென்னையில் வாக்கு பதிவு கடந்த காலத்தை விட சற்று குறைவாகவே பதிவாகி வருகிறது.

அத்துடன், தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பண விநியோகம் நடைபெறுவதாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. 

இதனால், குறிப்பிட்ட சில இடங்களில் லேசான சலசலப்பும் ஏற்பட்டது. இன்னும் சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்கு பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், “சென்னை அண்ணாநகர் வாக்குச் சாவடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்திவிட்டதாக” தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். 

அது குறித்து அண்ணாமலை பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டு விட்டது” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

“மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?” என்றும், அண்ணாமலை டிவிட்டர் மூலமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அதாவது, “மத்திய அமைச்சர் எல். முருகன், சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் முன்னதாக மாலை 4.30 மணிக்கு வாக்களிக்கச் செல்வதாக இருந்தார். ஆனால், அதற்கு முன்னரே வேறு ஒருவர் மத்திய அமைச்சர் முருகனின் வாக்கை கள்ள வாக்காக செலுத்திவிட்டதாக” புகார் எழுந்து உள்ளது.

இதனிடையே, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரின் வாக்கை, தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேறு ஒரு நபர் செலுத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான செய்திகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே, “எல்.முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை” என்று, தேர்தல் ஆணையம் சற்று முன்னதாக விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.