நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

stalin

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார். 

சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று காத்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். 

அதன்பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செய்ய முடியும்; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில்  நடிகர் விஜய் வாக்களித்தார். 

மேலும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.  கிருஷ்ணகிரியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி  வாக்களித்தார்.  வேலூர், காட்பாடி வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்.  திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் ஓட்டுப்போட வரும் மக்கள் குடை பிடித்தபடியே வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.