நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள்

- அந்த வகையில், தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார். அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐடி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், முதமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று அதன் பிறகு தனது வாக்கை பதிவு செய்தனர்.

- சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார்.

- சென்னை தி.நகரில் வி.கே.சசிகலா வாக்களித்தார்.

- சென்னை அடையாறு தாமோதரபுரம் மாநகராட்சி பள்ளி வாக்குசாவடியில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்.

- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 19 வது வார்டு தாகூர் உயர் நிலைப்பள்ளியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். 

- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலப்பாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது இரு மகன்களுடன் வந்து சாலிகிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். 

- சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். 

- வேலூர், காட்பாடி வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார். 

- விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் பொன்முடி வாக்களித்தார்.

- மதுரை மாவட்டம் தல்லாகுளம் மாநகராட்சி அரசுப் பள்ளியில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது வாக்கினை பதிவு செய்தார்.

- சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது வாக்கினை பதிவு செய்தார்.

- திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

- திருச்சி திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது வாக்கனை பதிவு செய்தார்.

- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 6 வது வார்டில் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தனது வாக்கினை பதிவு செய்தார்.

- திண்டிவனம் ரொட்டிகார தெருவிலுள்ள 20வது வாக்குச்சாவடி மையத்தில் அன்புமணி ராமதாஸ் எம்பி தனது வாக்கை செலுத்தினார்.

- சென்னை மந்தவெளி 126 வது வார்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார். 

- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மகளிர் பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்களித்தார்.

- கோவை, சுகுணாபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்.

- உடுமலை நகராட்சி பள்ளியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.  

- சென்னை மயிலாப்பூர் கேசரி உயர் நிலைப்பள்ளியில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் வாக்களித்தார். 

- கிருஷ்ணகிரியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி  வாக்களித்தார். 

- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோட்டில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

- சிவகாசி மாநகராட்சி 1 வது வார்டு பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கினை செலுத்தினார்.

சினிமா நட்சத்திரங்கள்

- நடிகர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, கருப்பு கலர் மாஸ்க் உடன், சிவப்பு நிற காரில் வந்து, நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

- கவிஞர் வைரமுத்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

- சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு, வாக்களித்தார்.

- நடிகர் அருண் விஜய் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

- சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

- உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகாவுடன் சென்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரி வாக்குச்சாவடியில் உதயநிதி வாக்களித்தார். 

பிரபலங்கள்

- சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வாக்களித்தார்.

- திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். 

இதனிடையே, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள பொது மக்கள் குடை பிடித்தபடி ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.