சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

mkstalin

தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 1369 மாநகராட்சி, 3824 நக ராட்சி மற்றும் 7409 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.போட்டியின்றி தேர்வானவர்கள், மரணமடைந்தவர்களை  தவிர்த்து மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.  முதல்வர் ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினார்கள்.

சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று காத்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். 

அதன்பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செய்ய முடியும்; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பண விநியோகம் உள்ளிட்ட  புகார்களை தெரிவிக்க,  திமுக வார் ரூம் ஒன்றை  அமைத்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் பண விநியோகம், பொருள் விநியோகம் செய்தால் அதை பற்றி கட்சி தலைமையிடம் புகார் அளிக்கவும், தேர்தல் நடைபெறும் இடங்களிலிருந்து புகார்களை கட்சிக்கு தெரிவிக்கவும், மின்னஞ்சல், தொலைபேசி வழியாக வார் ரூமை தொடர்பு கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.