“அதிமுக - திமுக” எந்த கட்சியில் குற்ற வழக்கு வேட்பாளர்கள் அதிகம் உள்ளனர் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேட்பாளர்களும் சரி, அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சரி, தங்களது எதிரி கட்சியான வேட்பாளர்களையும், அதன் தலைவர்கள் மீதும் மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அவர்கள் கடந்த கால ஆட்சியில் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி விளம்பரங்களும் செய்தும், அதனை சொல்லியுமே வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், தமிழக வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையைச் சற்று முன்பு வெளியிட்டார்.

அதில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 3,998 வேட்பாளர்களில் கிட்டத்தட்ட 3,559 வேட்பாளர்களின் விவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. 

அதன் படி, தற்போது போட்டியிடும் 3,559 வேட்பாளர்களில் 466 பேர், தங்கள் மீது குற்ற வழக்கு உள்ளதாக தங்களது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்துடன், கிட்டத்தட்ட 207 வேட்பாளர்கள், தங்களுக்கு எதிராகக் கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளனர் என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, “தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வாரியாக குற்றவியல் வழக்குகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த பட்டியின் படி, இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் திமுகவில் இருந்து கிட்டத்தட்ட 178 பேரில் 136 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. 

அதே போல், தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் 191 வேட்பாளர்களில் 46 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

அத்துடன், தேசிய கட்சியான பாஜக வேட்பாளர்களில் 20 பேரில் 15 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 21 வேட்பாளர்களில் 15 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளது தெரிய வந்து உள்ளது.  

மேலும், தேமுதிக வில் 60 வேட்பாளர்களில் 18 பேர் மீதும், அதே போல் பாமக வில் 10 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளது இதன் மூலம் தற்போது தெரிய வந்து உள்ளது. 

குறிப்பாக, பொருளாதார பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், கிட்டத்தட்ட 3,559 வேட்பாளர்களில், 652 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், இதில் அதிமுகவில் 164 வேட்பாளர்களும், திமுகவில் 155 வேட்பாளர்களும் இடம் பெற்று உள்ளனர். 

அதே போல், காங்கிரஸ் கட்சியில் 19 வேட்பாளர்களும், பாஜகவில் 15 வேட்பாளர்களும், தேமுதிகவில் 19 பேரும், பாமகவில் 14 பேருக்கும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. 

முக்கியமாக, போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வி விவரங்களை ஆய்வு மேற்கொண்டதில், 1731 வேட்பாளர்கள் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உள்ளனர் என்பதும், தற்போது தெரிய வந்திருக்கிறது. 

அதே போல், 1443 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் என்றும், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 106 பேர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், 3,559 வேட்பாளர்களில் 11 சதவிகிதம் பேர் அதாவது மிகச்ரியாக 380 பேர் மட்டுமே பெண்கள் இந்த தேர்தலில் போட்டியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

மிக முக்கியமாக, இந்த ஆய்வறிக்கையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.