இந்தியா முழுவதும் இன்று புதிதாக 81,466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 84.61 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை என கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே, தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்கள் போஸ்ட் போடுவதை பெரிதளவில் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் அறிவுரையின்படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக ஆலியாவின் காதலரும், பாலிவுட் நடிகருமான ரன்பிர் கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆலியா நடித்து வந்த படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆலியா பட் விரைவில குணமடைய ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆலியா பட் கைவசம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உள்ளது. ராஜமௌலி இயக்கி வரும் இந்த படம் அக்டோபர் 13-ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

முன்னதாக பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல், கார்த்திக் ஆர்யன், ரோஹித் சராஃப், ஆஷிஷ் வித்யார்தி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. முன்னதாக அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா, அர்ஜுன் கபூர், மலாய்கா அரோரா, நீத்து கபூர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

alia bhatt tested positive for covid 19 corona virus