கோவையில் நடைபெற்ற பேரணியின் போது, கடைகளை மூடச் சொன்ன பாஜகவினருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

கோவையில் பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நேற்றைய தினம் நடைபெற்றது. அதே நேரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது, பாஜகவினர் சிலர் அங்குள்ள டவுன்ஹால் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை அடைக்குமாறு அடவடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது, அந்த பகுதியைச் சேர்ந்த சக வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செய்தி, கோவை முழுவதும் பரவிய நிலையில், அதே தொகுதியில் போட்டியிடும் மற்ற கட்சியின் வேட்பாளர்களுக்கும் தகவல் கிடைத்தது. 

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாம் தமிழர் கட்சி கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அப்துல் வகாப், கடையின் உரிமையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் பற்றிக் கேட்டறிந்தார். இதனையடுத்து, கடையின் உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும், கடைகளை அடைக்குமாறு அடாவடியில் ஈடுபட்ட பாஜவினருக்கு எதிராகவும், அவர் புகார் அளித்தார். 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அளித்த புகாரில், “அமைதியாக உள்ள கோவையில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளைத் தூண்டிவிடும் வகையிலும் சில பாஜகவினர் செயல்படுவதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்றும், தனது புகார் மனுவில் கோரிக்கை விடுத்தார்.

அதே போல், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார், அந்த பகுதியில் உள்ள வர்த்தகர்களை நேரில் சந்தித்து, இந்த அடாவடி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு, வர்த்தகர்களுக்கு எதிரான பாஜகவினர் செயலை கண்டித்து, அவர் கண்டன குரலையும் எழுப்பினார்.

இதனை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், சம்மந்தப்பட்ட டவுன்ஹால் பகுதிக்கு நேரில் சென்று அந்த பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அத்துடன், “சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களைக் கண்டிப்பதாகவும்” அவர் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தார். 

மேலும், “மதம் நல்லிணக்கம் இருக்காத ஊரில் சுபிட்சம் இருக்காது, வேலை வாய்ப்பு இருக்காது, ஏழ்மை தாண்டவம் ஆடும்” என்றும், கமல் குறிப்பிட்டார்.

“அந்த ஏழ்மையில் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்கள்தான் அரசியல்வாதிகள் என்றும். ஏப்ரல் 6 ஆம் தேதி நீங்கள் முடிவு செய்தீர்கள்” என்றும், கூறினார். 

“ஏன் என்றால்? அரசியல் மாற்றம் வரும் என்றும், நேர்மையாக இருந்தால் தான், எல்லாம் சரியாக நடக்கும்” என்றும், கமல்ஹாசன் தெரிவித்தார்.