“செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால்.. பற்கள்லெல்லாம் வெளியே வந்து விடும்” என்று, மிரட்டிய பாஜக அண்ணாமலைக்கு, “திமுகவினரைத் தொட்டுப் பார் தம்பி”  என்று, திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, பலரும் தங்களது வாய்க்கு வந்தபடி பேசி, பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, “திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால், பற்கள்லெல்லாம் வெளியே வந்து விடும்” என்று, மிக பயங்கரமாக வெளிப்படையாகவே மிரட்டினார். 

மேலும், “கர்நாடக முகத்தைக் காட்ட வேண்டாம் என நினைக்கிறேன்” என்றும், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை, அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மிரட்டும் தோணியில் பேசினார்.

இதனையடுத்து, தேனி மாவட்டம் போடிநாயக்கனுரில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வனை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி, அண்ணாமலையின் மிரட்டலுக்குப் பதில் அளிக்கும் விதமாகப் பேசினார்.

அப்போது பேசிய கனிமொழி, “இங்கு துணை முதல்வர் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை” என்று, குறிப்பிட்டார்.

“சென்னையில் ஒரு நாள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். அதன் பிறகு, அம்மா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லி, தர்மயுத்தம் நடத்தினார். பிறகு, முதலமைச்சர் பழனிசாமி கூப்பிட்டுத் துணை முதல்வர் கொடுப்பதாகச் சொன்ன உடன், அதை மறந்து விட்டார். ஆனால், யார் மறந்தாலும் திமுக ஆட்சி அமைத்தவுடன், ஜெயலலிதா மரணத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்றும், கூறினார்.

“மக்களவையில் குடியுரிமைச் சட்டம் மற்றும் விவசாய சட்ட மசோதாவிற்குத் தமிழகத்தில் இருந்து ஆதரித்து வாக்களித்த ஒரே எம்.பி உங்கள் தொகுதி எம்.பி தான் என்றும், இந்த இரு சட்டத்தையும் ஆதரித்து 3 மாதங்களுக்கு முன் வாக்களித்த அதிமுக, தற்போது தேர்தல் வந்ததால் எதிர்ப்பதாகக் கூறி நாடகம் ஆடுகிறார்கள்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய கனிமொழி, “எனக்கு இன்னொரு முகம் இருக்குனு அண்ணாமலை சொல்றாரு, அண்ணாமலை என்றால் அவருக்கு ரஜினி என்ற நினைப்பு போல?” என்றும், குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

“செந்தில் பாலஜிய அடிச்சிருவேனு பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொல்றாரு. செந்தில் பாலாஜி மேல் கைவச்சிபாரு தம்பி” என்று, மிரட்டலான வகையில் கனிமொழி பதில் அளித்தார். 

தொடர்ந்து பேசிய கனிமொழி, “திமுக உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது என்றும், இது தமிழ்நாடு. இங்கு வச்சுக்க வேண்டாம்” என்றும், அவர் கூறினார். 

மேலும், “எங்கே யார், எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும் என்றும், நாவடக்கம் வேண்டும்” என்றும், கனிமொழி வலியுறுத்தினார்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மிரட்டலுக்கு, திமுக எம்.பி. கனிமொழியின் பதிலடி, தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த செய்தி தமிழகம் முழுவதும் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.