மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசனுக்கு வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், திமுகவினர் வீட்டில் தொடரும் வருமான வரி மிரட்டலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக அரசியல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி, தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், சில அதிரடியான சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் படி, கடந்த வாரம் திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு செந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். ஆனால், இந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரை, தனது கணவர் சபரீசனோடு சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகிறார். 

இப்படியான நிலையில் தான், மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரை - சபரீசன் வீட்டில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அத்துடன், திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான மேலும் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இது, வருமானவரி சோதனையானது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், இந்த வருமானவரி சோதனையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சக அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக, கடந்த சில நாள்களாகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் விமர்சித்துப் பேசிவந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” அக்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். 

இதனிடையே, இந்த வருமானவரி சோதனை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “மத்திய அரசின் இந்த போக்கு ஜனநாயகம் அல்ல. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று, தெரிவித்தார். 

'தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பாஜக கூட்டணியின் தோல்வி பயத்தின் விளைவு என்பதைக் காட்டுகிறது. இது ஜனநாயகமான போக்கு அல்ல; நாணயமான அரசியல் அல்ல. ரெய்டு போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் திமுக பயப்படாது” என்றும், கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவது, பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு இது என்றும், இத்தகைய அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களைப் பொது மக்கள் கவனித்துக் கொண்டு தான் உள்ளனர் என்றும், தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்” என்றும், திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.