பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா மற்றும் பலர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

பாகுபலி படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படம் இந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் இன்று அஜய் தேவ்கனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் அறிமுக டீஸர்களைப் படக்குழுவினர் வெளியிட்டனர். 

அவை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அஜய் தேவ்கன் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை ஆர்ஆர்ஆர் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோவில் அஜய் தேவ்கனின் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 13-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். ஓர் போர் வீரனை ஆங்கிலேயே சிப்பாய்கள் சுற்றி வளைத்தது போல் இந்த மோஷன் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.