வானதி சீனிவாசன் நம்முடைய எண்ணங்களை பாரத பிரதமரிடம் கொண்டு செல்லும் தூதுவராக இருப்பார் என்று கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கூறினார்.


மேலும் அவர், ‘’ 234 தொகுதிகளிலும் வெற்றி என ஸ்டாலின் தவறான தகவல்களை சொல்கின்றார். எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெற்றி பெற முடியாது. தமிழகம் வளர்ச்சியை பெற அதிமுக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூரில் வேலுமணி திறமையானவர். கொடுக்கின்ற பணியை சிறப்பாக செய்ய கூடியவர். கோவையில் மட்டுமே ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. 


மேலும், கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வர 6,700 கோடியில் திட்டம் தயாராகி வருகின்றது. விமான நிலைய விரிவாக்கம், கோவை மேற்கு புறவழிச்சாலை கொண்டு வரப்படுகின்றது. இதுதவிர, கோவையில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். கிரிக்கெட் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்,  ராணுவத் தளவாட உதிரிபாக தொழிற்சாலை உருவாக்கப்படும். 


கவர்னிடம் ஸ்டாலின் புகார் பட்டியலை கொடுத்து இருக்கின்றார். அதில் 600 கோடி ஊழல் செய்து இருப்பதாக சொல்கின்றார். அந்த டெண்டர் ரத்து செய்து 2 ஆண்டுகள் ஆகின்றது.குறைகளை செல்லும் போது ஆராய்ந்து சொல்ல வேண்டும்.


இஸ்லாமிய மக்களுக்கு நிறைய திட்டங்களை அதிமுக செய்துள்ளது. இஸ்லாமிய மக்களை குழப்பி வாக்குகளை பெற முயல்கின்றது திமுக. அதற்கு பலியாகிவிடாதீர்கள். அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும அரசாக அதிமுக அரசு இருக்கின்றது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் அச்சமின்றி மகிழ்ச்சியோடு வாழலாம். 


திண்டுக்கல் லியோனி, தயாநிதி ஆகியோர் பெண்களை கொச்சைபடுத்தி பேசுகின்றனர். அவர்களை கட்சி தலைமை கண்டிப்பதில்லை. திமுகவிற்கு இந்த தேர்தல் இறுதி தேர்தலாக இருக்க வேண்டும்.” என்று பேசினார்.