அப்பா பெயரையே மறந்து, போஸ்டர் முதல் விளம்பரங்கள் வரை ஸ்டாலின், தன்னை மட்டுமே முன்னிலை படுத்திக்கொள்வது புதிய விமர்சனங்களை எழுப்பி உள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே “ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு” என்கிற பாடலை பட்டி, தொட்டி எல்லாம் ஒலிபரப்பி வாக்கு சேகரித்து வருகின்றனர் திமுக உடன்பிறப்புகள். அண்ணா கட்டமைத்து, கலைஞர் கட்டிக்காத்த திமுக, இப்போது மு.க. ஸ்டாலின் கைவசம் சென்று உள்ளது. 

போஸ்டர் முதல் விளம்பரங்கள் வரை ஸ்டாலின் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவது திமுகவின் மூத்த நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அதிருப்தி அடைய செய்து உள்ளது. பதவி வருவதற்கு முன்பு வரை ‘நான் கலைஞர் மகன்’ என பெருமை பேசி வந்த ஸ்டாலின், இப்போது செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார். 

திமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட கருணாநிதி ஆட்சி அமையப் பாடுபடுவோம் என்ற சொல்வது கிடையாது. தளபதி முதலமைச்சராக வந்தால் நமக்கெல்லாம் விடிவு என்று தான் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் மறைந்த தலைவர்களான வாஜ்பாய், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரது முகங்களை தங்களுடைய தேர்தல் அறிக்கை முதல், போஸ்டர்கள் வரை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால், தனது சொந்த அப்பாவின் பெயரையும், முகத்தையுமே தொண்டர்களிடம் இருந்து மறக்கடிக்கும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. 

மு.கருணாநிதி என்ற மாபெரும் தலைவரின் மகன் என்பதால் தான், மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடம் கொஞ்சமாவது மவுசு இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தால் மட்டுமே திமுகவுக்கு விடிவு கிடைக்கும். எங்கு சென்றாலும், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின், தன்னுடைய தந்தையான கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது, செய்த மக்கள் நல திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கலாமே? அதை விட்டு விட்டு ஏன் இப்படி தேவையில்லாமல் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வாக்கு சேகரிக்கிறார் என்ற கேள்விகளும் மக்களிடையே உலவ வருகிறது. 

சொந்த கட்சித் தலைவராக இருந்த தன்னுடைய அப்பாவையே புறக்கணித்து விட்டு, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினால் எப்படி மக்கள் வாழ்க்கையில் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?. இது வரை ஒருமுறை கூட முதலமைச்சராக அமராத ஸ்டாலின், அதிமுகவின் தனிப்பெரும் ஆளுமையான புரட்சித் தலைவி ஜெயலலிதாவை இழந்த பிறகும் கூட அவருடைய ஆட்சியை 4 ஆண்டுகள் கட்டிக்காத்த எடப்பாடியாரைப் பார்த்து ஏளனமான கேள்விக்கணைகளை வீசுவது நகைப்புக்குரியது. ‘வாய் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ’ என்பதையே சரியாக உச்சரிக்கத் தெரியாத முத்தமிழ் அறிஞர் கலைஞர் மகனின் மத்திய அரசு முதல் மாநில அரசு வரை உள்ள தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?

பதவி ஆசையில் கட்சியை வளர்ந்த கலைஞரையே ஓரங்கட்டிவிட்டு, நான், நான் மட்டும் தான் இனி திமுக என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயலும் ஸ்டாலின் எப்படி மக்களுக்கு விடியல் தரப்போகிறார்? என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதிலளிக்க முடியுமா?  தலைவன் தொண்டர்களால் நேசிக்கப்படும் வரை மட்டுமே கட்சியும், மக்களால் நேசிக்கப்படும் வரை மட்டுமே ஆட்சியும் தழைத்தோங்க முடியும் என்பதே நிதர்சனமான வரலாறு என்பதே உண்மை” என்றும் அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.